தேவத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல் வாழ்த்துதல் UNDERSTANDING THE GODHEAD வெளி. 1:4-6: "யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமான வராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும். வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்". 'ஆசியா' என்னும் பதம் சரியாக ஆசியா மைனரைக் குறிக்கும். இது ஏறக்குறைய அமெரிக்காவிலுளன்ள இந்தியானாவின் (Indiana) விஸ்தீரணம் வாய்ந்தது. தங்களுடைய விசேஷத் தன்மைகளுக்கென்று இங்குள்ள ஏழு சபைகள் பொறுக்கியெடுக்கப்பட்டு இவைகளின் தன்மைகள் நூற்றாண்டுகள் கழித்துப் படிப்படியாய்த் தோன்றிய ஏழு சபையின் காலங்களில் காணப்பட்டன. சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளும், முறையே ஏழு தூதர்களுக்குள்ளிருந்து அவரவர் வாழ்ந்த காலங் களில் ஊழியத்தை அளித்தன. 'இருக்கிறவர்', 'இருந்தவர்', 'வருகிறவர்', 'உண்மையுள்ள சாட்சி', 'மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர்', 'பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி', 'அல்பாவும் ஓமெகாவும்', 'சர்வவல்லவர்' என்னும் பட்டப்பெயர்கள், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவின ஒருவரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விவரிக்கின்றன. யோவானுக்குள்ளிருந்த தேவ ஆவியானவர், தேவன் ஒருவரே என்றும், அவரே எல்லாவற்றிற்கும் மேலான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் வெளிப்படுத்த மேற்கூறிய பட்டப்பெயர்களைக் கொடுக்கிறார். ஒரு தேவனுக்குப் பதிலாக மூன்று தேவர்கள் உண்டு என்று அநேகர் இக்காலத்தில் தப்பான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். இயேசு யோவானுக்களித்த வெளிப்படுத்துதல் இத்தவறைச் சரிப்படுத்துகிறது. மூன்று கடவுள்கள் இல்லை; ஆனால் ஒரே கடவுள் மூன்று பதவிகளைக் (Office) கொண்டவராயிருக்கிறார். ஒரே தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று பட்டங்களைக் கொண்டிருக்கிறார். ஆதித் திருச்சபைக்கு இந்த மகத்தான வெளிப்பாடு உண்டாயிருந்தது. இந்தக் கடைசிக் காலத்தில் அது நமக்கு மீண்டும் கொடுக்கப்பட்டு, சரியான தண்ணீர் ஞானஸ்நானத்தின் உண்மையும் வெளிப்படுத்தப்படுகிறது. நவீன வேத சாஸ்திரிகள் நான் கூறுவதை ஆமோதிக்க மாட்டனர். ஏனெனில் ஒரு கிறிஸ்துவப் பத்திரிகையிலே பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது. "திரித்துவத்தைக் குறித்த போதகம் பழைய ஏற்பாட்டின் சாராம்சமும் புதிய ஏற்பாட்டின் சாராம்சமுமாகத் திகழ்கின்றது. ஒரு தேவனைவிட அதிகமான தெய்வங்கள் உண்டு என்னும் தத்துவத்தை இவ்விரு ஏற்பாடுகளும் ஆதரிக்கவில்லை. இருப்பினும் பிதா கடவுளென்றும், குமாரன் கடவுளென்றும், பரிசுத்த ஆவி கடவுளென்றும், இம்மூன்றும் ஒரே ஆளின் அம்சங்களல்லவென்றும், மூன்று பேர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டவர்களாயிருக் கின்றனரென்றும் புதிய ஏற்பாடு தெளிவாக விளக்குகிறது. ஒரே தேவனும் மூன்று பேர்களுமாகிய மகத்தான போதனை நமக்குண்டு”. மேலும் "வேதத்தில் கூறப்பட்ட வண்ணம் தேவன் மூன்று ஆட்களைக் கொண்டவராயிருக்கிறாரேயன்றி அவர் ஒரே ஆளல்ல. இதுதான் திரித்துவத்தின் பெரிய இரகசியம்" என்று கூறப்படுகிறது. திரித்துவக்காரர் கூறுவது போன்று இது ஒரு பெரிய இரகசியம்தான். மூன்று பேர் எவ்வாறு ஒரே கடவுளில் இருக்க முடியும்? இப்போதனையை ஆதரிக்கும் வேதப்புத்தகம் எதுவு மில்லை. புத்திக்கூர்மையற்ற யோசனையின் விளைவாக இது உண்டானது. எல்லா வகையிலும் ஒத்த மூன்று வித்தியாசப்பட்ட ஆட்கள் என்று கூறும்போது அது மூன்று கடவுள்களைத்தான் குறிக்கின்றது. அங்ஙனம் இல்லாவிடின் மொழியானது தான் சாதாரணம் விவரிக்கும் அர்த்தத்தை முழுவதுமாக இழந்து விட்டிருக்க வேண்டும். "இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்" என்னும் வசனத்தை நாம் மறுபடியும் சிந்திப்போம். இது மனிதனையோ அல்லது தீர்க்கதரிசியையோ குறிக்காமல் தேவனைக் குறிக்கிறது. மேலும் இவ்வசனம் மூன்று கடவுள்களை வெளிப்படுத்தாமல் சர்வவல்லமையுள்ள ஒரே தேவனை வெளிப்படுத்துகிறது. சபையின் துவக்க காலத்திலிருந்த மக்கள் மூன்று கடவுள்கள் இருப்பதாக விசுவாசிக்கவில்லை. அப்போஸ்தலர்களிடையே இத் தகைய நம்பிக்கை எதுவும் இருந்ததுமில்லை. அப்போஸ்தலரின் காலங்களுக்குப் பிறகு இத்தத்துவம் ஒரு பிரச்சினையாகி (issue) நிசயாவின் ஆலோசனை சபையில் (Nicene Council) ரோமன் மார்க்கத்தின் கொள்கையாக (Cardinal Doctrine) ஆக்கப்பட்டது. தேவத்துவத்தைக் குறித்த போதகம் நிசாயாவில் பிளவுண்டாக்கி அதன் விளைவாக முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைப் பின் பற்றும் இருசாரார் தோன்றினர். ஒருசாரார் அநேக கடவுள்களுண்டு (Polytheism) என்னும் தத்துவத்தைப் பின்பற்றி, மூன்று கடவுள் களுண்டு என்று சாதித்தனர். மற்றைய வகுப்பாரோ, ஒரே தேவன் உண்டு என்று நம்பினர் (unitarianism). இன்றுவரை இவ்விரு திறத்தாரும் கிறிஸ்தவர்களிடையே காணப்படுகின்றனர். ஆனால் ஆவியானவரோ யோவானின் மூலம் "நானே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நான் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறேன். என்னைத் தவிர வேறே தேவனில்லை" என்று சபைகளுக்கு வெளிப் படுத்துகிறார்; இந்த வெளிப்படுத்துதலின்மேல் தம்முடைய முத் திரையைப் போட்டிருக்கிறார். இயேசுவுக்குப் பிதா யார்? "அவள் (மரியாள்) பரிசுத்த ஆவி யினாலே கர்ப்பவதியானாள்" என்று வேதம் கூறுகிறது (மத். 1:18), தேவன் தம்முடைய பிதா என்று இயேசு தாமே கூறினார். அப்படி யெனில் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பதங்களான தேவனாகிய பிதா, தேவனாகிய பரிசுத்த ஆவி இவையிரண்டும் பிதாவும் பரிசுத்த ஆவியும் ஒருவரே என்று காண்பிக்கப்படு கின்றன. அவ்வாறு இல்லாவிடில், இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டு தகப்பன்மார் இருக்க வேண்டும். இயேசுவும், "நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (இரண்டல்ல) என்று கூறுகிறார். அப்படியெனில் தேவன் ஒருவரே. மேற்கூறியது சரித்திரப் பிரகாரமாகவும், வேதப்பிரகார மாகவும் உண்மையாக இருப்பதால், இந்த மூன்று கடவுளின் தத்துவம் எங்கிருந்து வந்தது என்று மக்கள் அதிசயப்படுகின்றனர். கி.பி. 325ம் ஆண்டில் நடைபெற்ற நிசயாவின் ஆலோசனை சங்கத்தில் இது ஆதாரப் போதனையாக (Foundational Doctrine) ஏற்படுத்தப் பட்டது. வேதத்தில் காணப்படாத "திரித்துவம்" என்னும் போதனை ரோமாபுரியிலுண்டாயிருந்த அநேக அஞ்ஞான தெய்வங்களை ஆதார மாகக் கொண்டு உண்டாக்கப்பட்டது. ரோமர்கள் இத்தெய்வங் களிடம் தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுத்தனர். அதுவுமின்றி, தங்கள் மூதாதையர் மத்தியஸ்த ஸ்தானம் வகிப்பதாக எண்ணி அவர்களிடத்திலும் வேண்டுதல் செய்தனர். பின்பு பழைய அஞ்ஞான தெய்வங்களுக்குப் புதிய நாமங்கள் கொடுக்கப்பட்டு, வேதப்பிர காரமாக இருக்கவேண்டுமென்று கருதி, அவர்கள் பரிசுத்தவான் களென்ற பெயரில் அழைக்கப்பட்டனர். ஜுபிடர் (Jupiter), வீனஸ் (Venus), மார்ஸ் (Mars) என்னும் தெய்வங்களுக்குப் பதிலாக பவுல், பேதுரு, பாத்திமா, கிறிஸ்டபர் போன்றவர்கள் தொழப்பட்டனர். ரோமாபுரியின் அஞ்ஞான மார்க்கம் ஒரு கடவுளைக் கொண்டு நடத்தப்பட முடியாததால் அவரை மூன்று கூறுகளாக்கி, மூதாதை யரை மத்தியஸ்தர்களாகத் தொழுதது போன்று பரிசுத்தவான்களை மத்தியஸ்தர்களாகத் தொழ ஆரம்பித்தனர். அது முதற்கொண்டு ஒரே கடவுளுக்கு மூன்று பதவிகள் அல்லது மூன்று தோற்றங்கள் (manifestations) உண்டு என்பதை மக்கள் உணரக்கூடாமற் போயிற்று. வேதப்பிரகாரம் தேவன் ஒருவரே என்பதை அவர் அறிவர். ஆனால் அவரை ஒரு திராட்சக குலைக்குச் சமமாகக் கருதும் ஒரு விசித்திரக் கொள்கையை உண் டாக்கினர். அதாவது மூன்று ஆட்கள் தெய்வீகத் தன்மையைச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர் என நம்பினர். ஆனால் இயேசுவை இருக்கிறவரும்', 'இருந்தவரும்', 'வருகிறவரும்' என்று வெளிப்படுத்தின விசேஷம் அழைக்கிறது. அவர் 'அல்பாவும் ஒமெகாவும்' என்று கூறும்போது, அவரே எல்லாமென்றும் சர்வ வல்லவர் என்றும் அர்த்தம். அவரே சாரோனின் ரோஜா, பள்ளத் தாக்கின் லீலி, காலை விடிவெள்ளி, நீதியின் கிளை, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, அவரே தேவன், சர்வவல்லமையுள்ள தேவன், ஒரே தேவன். “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப் பட்டார், உலகத்தில் விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்” என்று வேதம் கூறுகிறது (1 தீமோ 3:16), முதலாம், இரண்டாம் மூன்றாம் ஆளைக்குறித்து இவ்வசனம் எதுவும் கூறவில்லை. தேவன் மாம்சத்தில் தோன்றினார் என்று மாத்திரம் கூறுகிறது. ஆம், ஒரே தேவன் மாம்சத்தில் வந்ததன் காரணமாக அவர் வேறொரு தேவனாகி விடவில்லை. அவர் அதே தேவனாயிருந்தார். தேவன் ஒருவரே என்று அப்போஸ்தலர் காலங்களில் வெளிப்பட்டது; இப்பொழுதும் அது நமக்கு வெளிப்படுகிறது. ஆதியிலே கர்த்தர் எவ்வாறிருந்தார் என்று வேதத்தில் நாம் ஆராய்வோம். மகத்தான யேகோவா, அக்கினி ஸ்தம்பத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தோன்றினார். உடன்படிக்கையின் தூதனாக அவர் அக்கினி ஸ்தம்பத்தில் வாசம் செய்து இஸ்ர வேலரைத் தினமும் வழிநடத்தினார். தேவாலயத்தில் மேகஸ் தம்பத்தில் காட்சி அளித்தார். பின்னர் ஒரு நாள் கன்னிகையின் வயிற்றில் தமக்கென்று ஆயத்தப்படுத்தப்பட்ட சரீரத்தில் தோன்றினார். இஸ்ரவேல் மக்களின் கூடாரங்களுக்குமேல் வாசம் செய்த கர்த்தர் இப்பொழுது மாம்சமாகிய கூடாரத்தில் மனிதர் களுக்கிடையில் வாசம் செய்தார். ஆனால் அவர் அதே தேவன்தான். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தார் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது. வெளிப்புறத்துக் காணும் சரீரம்தான் இயேசு. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. இதைக் காட்டிலும் தெளிவானது எதுவுமில்லை. தேவத்துவம் சரீரப்பிரகாரமாக வாசம் செய்வது ஒரு பரம ரகசியம்தான் (mystery). ஆனாலும் இது முற்றிலும் உண்மை . முன்பு தேவன் மூன்று ஆட்களாக இல்லையென்றால் இப்பொழுதும் மூன்று ஆட்களாக இருக்க முடியாது. தேவன் ஒருவரே. இந்த தேவன் மானிடனானார். "நான் பிதாவிலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன்” என்று இயேசு கூறினார் (யோவான் 16:28). அவர் கூறியது உண்மை யாக நடந்தேறியது. அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலின் மூலம் அவர் இந்த உலகத்திலிருந்து மறைந்தார். பிறகு பவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில் அவரைச் சந்தித்தபொழுது, அவர் பவுலை நோக்கி, "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்" என்று கேட்க, பவுல் பிரதி யுத்தரமாக "ஆண்டவரே, நீர் யார்? என்றான். அதற்கு அவர் "நானே, இயேசு" என்றார். அச்சயம் அவர் அக்கினி ஸ்தம்பமாக இருந்தார். அவர் கூறியவண்ணம் பிதாவினிடத்திற்கு மறுபடியும் சென்றார். மாம்சமாகிய கூடாரத்தில் வாசம் செய்யும் முன்பு எந்நிலையிலிருந்தாரோ அதே நிலைக்குத் திரும்பிச் சென்றார். "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்" (யோவான் 1:18). இப்பொழுது இயேசு பிதாவின் மடியில் (மடிக்குள்) (in the bosom) இருப்பதாக யோவான் விளம்புகிறார். "இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்க ளுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" என்று வேதம் கூறு கிறது (லூக்கா 2: 11). அவர் கிறிஸ்துவாகப் பிறந்து, எட்டு நாளைக்குப் பிறகு விருத்தசேதனம் செய்யப்பட்ட பின்பு, தேவதூதன் கட்டளை யிட்டவண்ணமாக 'இயேசு' என்று பெயரிடப்பட்டார். என்னை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் பிரான்ஹாமாகப் பிறந்தேன். பிறந்த பிறகு எனக்கு வில்லியம்' என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அதே விதமாக அவர் கிறிஸ்துவாயிருந்தார். ஆனால் மனிதரிடையில் வாசம் செய்தபோது 'இயேசு' என்று அழைக்கப்பட்டார். மனிதர் காணும் வெளிப்புறமான கூடாரம் 'இயேசு' என்று அழைக்கப்பட்டது. அவரே மகிமையின் தேவனும், மாமிசத்தில் வெளிப்பட்ட சர்வவல்லமையுள்ளவராயிருக்கிறார். அவரே பிதாவாகிய தேவன், குமாரன், பரிசுத்த ஆவி எல்லா மானவர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவை வெறும் பட்டங்களே (titles); அவை பெயர்களல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து' என்பது நாமமாயிருப்பதால், அந்த நாமத்தினாலே நாம் ஞானஸ்நானம் கொடுக்கிறோம். மேற்கூறிய பட்டங்களுக்குரிய நாமம் அதுவே. உதாரணமாக, ஒரு புதிதாய் பிறந்த ஆண் குழந்தைக்குப் பெயரிடுவதாக வைத்துக் கொள்வோம். அவன் குழந்தையாய் பிறந்தான்; அவனுடைய பதவி மகன் என்பதே. அவனுக்கு ஜான் ஹென்றி ப்ரவுன் (John Henry Brown) என்று பெயரிடும் போது அது அவனுடைய நாமமாகிறது. நாம் 'இயேசுவின் நாமத்தில்' மாத்திரம் ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது; ஏனெனில் நம் முடைய இரட்சகராகிய இயேசுவுக்கு முன்பும் அதன் பின்னரும் ஆயிரக்கணக்கான இயேசுக்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்திருக் கின்றனர். அவர்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே கிறிஸ்துவாகப் பிறந்திருக்கிறார். ஆகையால் 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். இயேசு கிறிஸ்து, தேவனுடைய நித்திய குமாரன் என்று மக்கள் கூறுகின்றனர். எந்தக் குமாரனாவது நித்தியமாக இருக் கிறார் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நித்தியமான யாவற்றிற் கும் தொடக்கம் இருந்ததில்லை, இவர் மாம்சத்தில் வெளிப்பட்ட நித்திய தேவனேயன்றி (யேகோவா) நித்திய குமாரனல்ல. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத் திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது" (யோவான் 1:1) என்றும், அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (யோவான் 1:14) என்றும் யோவான் எழுதின சுவி சேஷம் உரைக்கிறது. அவர் பிதாவின் நித்திய வார்த்தைக்கு உண்மையும் விசுவாசமுள்ள சாட்சியாக இருந்தார். பிதா தாம் கூறக் கட்டளையிட்ட யாவையும் எடுத்துரைத்த தீர்க்கதரிசியாக விளங்கினார். "என் பிதா என்னில் இருக்கிறார்" என்று அவர் கூறினார். ஆம், "இயேசுவாகிய கூடாரம்” என் பிதா என்னில் இருக்கிறார் என்று கூறினார். கர்த்தருக்கு "நம்முடைய நீதி", "நம்முடைய சமாதானம்", "எப்பொழுதும் பிரசன்னர்”, “பிதா”, “குமாரன்", "பரிசுத்த ஆவி", என்று அநேக பட்டப் பெயர்களுண்டு. ஆனால் அவருக்கு 'இயேசு' என்ற ஒரே மனித நாமம் தான் உண்டு. தேவனுக்கு எவ்வாறு மூன்று பதவிகள் அல்லது மூன்று விதமான தோற்றங்கள் (manifestations) இருக்க முடியும் என்று ஆலோசித்துக் குழப்பமடையாதீர்கள். இவ்வுலகத்திலிருக்கும் போது அவர் தீர்க்கதரிசியாக இருந்தார். பரலோகத்தில் அவர் ஆசாரியராயிருக்கிறார். மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரும்போது ராஜாதி ராஜாவாக வருவார். இருந்தவர்' என்பது தீர்க்கதரிசியாகிய இயேசுவையும், ‘இருக்கிறவர்' என்பது நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபித்து நமக்காக பரிந்து பேசும் ஆசாரியரான இயேசு வையும், வருகிறவர்' என்பது வரப்போகும் ராஜாவாகிய இயேசு வையும் குறிக்கின்றன. இவ்வுலகத்திலே அவர் வார்த்தையாக (தீர்க்கதரிசியாக) இருந்தார். மோசே அவரைக் குறித்து, “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உங் களுக்காக எழும்பப் பண்ணுவார். அந்தத் தீர்க்கதரிசியின் சொற் கேளாதவனெவனோ அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக் கப்படுவான்" என்றான் (அப். 3: 22-23). இயேசுவைக் குறித்த இந்த சத்தியங்களைக் கவனியுங்கள். பூலோகத்தில் தீர்க்கதரிசி, ஆட்டுக்குட்டி, குமாரன் என்னும் இம் மூன்று உத்தியோகங்களையும் அவர் வகித்தார். ஆனால் இவை கள் அவரை மூன்று ஆட்களாக ஆக்கிவிடவில்லை. இவை மூன்றும் ஒரே ஆளாகிய இயேசுவின் உத்தியோகங்களாகும். தேவத்துவத்தில் ஒன்றைவிட அதிகமான ஆட்களுண்டு என்று நிரூபிப்பதற்கென திரித்துவக்காரர் பின்வரும் வேதவாக்கியங்களை அடிக்கடி எடுத்துக் கூறுவதுண்டு. "அப்பொழுது, இதோ, அடிக் கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியில் நிற்கக் கண் டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடைய தாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்தி லிருந்து புஸ்தகத்தை வாங்கினார். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கின போது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்த வான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற் கலசங்களையும் பிடித்துக் கொண்டு ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாக விழுந்து..." (வெளி 5:6-8). இவ்வசனங்களைத் தனியாக (அதாவது மற்றைய வசனங்களோடு ஒப்பிடாமல்) படித்தால் திரித்துவப் போதனையை இது நிரூபிப்பதுபோல்தான் காணப்படும். ஆனால் இவ்வசனங்களுடன் பின்வரும் வசனங்களையும் படிக்கவும். "உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்த சிங் காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று... மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும் போது, இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாக விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திறிகு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொளளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத் தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்" (வெளி 4:2-3, 9-11). இரண்டாம் வசனத்தில், ஒருவர் (இருவர்' 'மூவர்' அல்ல) சிங்காசனத்தில் வீற்றிருந்ததாகக் கூறப் பட்டிருக்கிறது. மூன்றாவது வசனம், "வீற்றிருந்தவர் ("வீற்றிருந்த வர்கள்" அல்ல) பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்" என்று கூறுகிறது. மறுபடியும் பத்தாம் வசனம், "இருபத்துநான்கு மூப்பர்கள் வீற்றிருந்தவருக்கு (வீற்றிருந்த வர்களுக்கு அல்ல) முன்பாக வணக்கமாய் விழுந்தார்கள் என்று குறிக்கிறது. பதினோராம் வசனத்தில், "தேவரீர் (தேவரீர்கள்' அல்ல) பாத்திரராயிருக்கிறீர்" என்று எழுதப்பட்டிருக்கிறது. அதே வசனம் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவரைச் சிருஷ்டித்தவர் என்று அழைக்கிறது. இயேசுதான் அந்த சிருஷ்டிகர்த்தர் (யோவான் 1:3). பழைய ஏற்பாட்டின் ஆவியாகிய தேவன் (யேகோவா) அவரே (ஆதி 1:1). இதோடு தொடர்ந்து பின்வரும் வசனங்களைப் படியுங்கள். "நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடுகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும் படிக்கு அருள் செய்வேன்" (வெளி. 3:21). "விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக் கடவோம்; அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்". (எபி. 12:12), 'வெளிப்படுத்தின விசேஷத்தை ' எழுதிய இயேசு, அவர்தாமே பிதாவோடு சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் பவுலுக்குள்ளிருந்த தீர்க்கதரிசன ஆவி (அதா வது கிறிஸ்துவின் ஆவி), அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருப்பதாகக் கூறுகிறது. முதலில் யோவான் ஒருவரை மாத்திரம் சிங்காசனத்தில் கண்டான் (வெளி 4: 2, 3). அதன்பிறகு தொடர்ச்சியாய் சம்பவங்கள் நடைபெற்று, வெளி: 5:6-8ல் ஆட்டுக் குட்டியானவர் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய (அதாவது வெளி. 4:2-3, 9-10ல் கூறப்பட்டவர்) வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதுதான் ஒரே தேவனின் பரம ரகசியம். ஆதியிலே தேவன் ஒருவரா யிருந்தார். அவரிலிருந்து இயேசு புறப்பட்டு, மாம்சத்தில் தோன்றி, மரித்து, உயிரோடெழுந்து "பிதாவின் மடிக்குத் திரும்பினார். "பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” என்று யோவான் உரைக்கிறார் (யோவான் 1:18). தேவன் (மேசியா) தம்முடைய மணவாட்டியை அழைத்துக் கொண்டு போய், பின்னர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தம்மை வெளிப்படுத்துங் காலம் வந்துவிட்டது. ஆகையால் அவர் மறுபடியும் தேவனிடத்தி லிருந்து புறப்பட்டு, மாமிசத்தில் காணப்பட்டு, "தாவீதின் குமாரனா கவும், ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாவாகவும், புறஜாதி மண வாட்டியின் மணாளனாகவும்” மனிதரோடு தொடர்பு கொள்ளுகிறார். அவ்வாறு புறப்பட்டு வந்த காட்சியைத்தான் யோவான் கண்டான் (வெளி. 5:6-8). இதனால் இரண்டு கடவுள் உண்டு என்று நினைத்து விடக்கூடாது. ஒரே தேவன் தம்முடைய மகத்தான பதவிகளையும் பட்டங்களையும் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார். ஜனங்கள் இயேசுவைத் தீர்க்கதரிசியென்று அறிந்திருந் தார்கள். மேசியாவின் அடையாளம் தீர்க்கதரிசியிடம் காணப்படும் என்று அவர்கள் உணர்ந்திருந்தனர், "பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு : நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்கு பிலிப்பு: வந்து பார் என்றான். இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வரக் கண்டு அவனைக் குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: ரபி, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தர மாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரி தானவைகளைக் காண்பாய் என்றார். பின்னும் அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும் தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவான் 1:44-51). இயேசு இவ்விதமாக மக்களின் இருதயங்களிலுள்ள சிந்தனைகளை அறிந்ததால், அவரே அபிஷேகம் பெற்ற தேவனுடைய வார்த்தையாகிய மேசியா என் பதைத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கண்டு கொள்ள முடிந்தது. "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள் எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனை களையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபி. 4:12). கிணற்றடியிலிருந்த சமாரியா ஸ்திரீயின் சிந்தனைகளை இயேசு அறிந்த போது, அது மேசியாவின் தன்மை என்பதை அவள் உணர்ந்து, மெய்யாகவே அவர் தீர்க்கதரிசியென்று அவரைப் புகழ்ந்தாள். அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங் கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும் தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டி ருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுக் கொள்ள உம்மிடத்தில் பாத்திரம் இல்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னே எங்கேயிந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருக ஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும், தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நிரூற்றாயிருக்கும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுக் கொள்ள வராமலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந் தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல; இதை உள்ளபடி சொன்னாய் என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுது கொண்டு வந்தார் கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுது கொள்ளுங்காலம் வருகிறது. நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம். ஏனென் றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மை யோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப் பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவி யோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்பட்ட மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும் போது எல்லா வற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” (யோவான் 4:7-26). "அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்” (வெளி. 15:3). ஆம், நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக தம் முடைய இரத்தத்தைக் கிருபாசனத்தின்மேல் பிடித்துக் கொண்டி ருக்கிற பிரதான ஆசாரியனாகிய ஆட்டுக்குட்டியானவரே சர்வ வல்லமையுள்ள தேவன். இதுதான் அவருடைய தற்போதைய ஊழியம். இப்பொழுது நம்முடைய பாவங்களுக்காகத் தம்முடைய இரத்தம் சிந்துதலின்மூலம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு நாளில் அந்த ஆட்டுக்குட்டியானவர் யூதா கோத் திரத்தின் சிங்கமாக மாறுவார், அவர் வல்லமையோடும் மகிமை யோடும் புறப்பட்டு இந்த உலகத்தை ஆளுவதற்கென அதிகாரம் பெறுவார்.. ஆம், அவரே இவ்வுலகத்தின் எதிர்கால ராஜா. அங்ஙனம் கூறுவதால் அவர் இப்பொழுது ராஜாவாயில்லை என்று அர்த்தங்கொள்ளாதீர்கள். அவர் இப்பொழுது பரிசுத்த வான்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறார். ஆவிக்குரிய ராஜ்யத்தை இப்பொழுது அரசாளுகிறார். நாம் உலகத்துக்குரியவர்களல்லாதது போன்று அவருடைய ராஜ்யமும் இவ்வுலகத்துக்குரியதல்ல, நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருப்பதனால் நாம் இவ்வுல கத்தாரினின்று மாறுபட்டவர்களாகக் காணப்பட்டு, இயேசு அர சாளும் மறுபிறப்பின் ராஜ்யத்தின் தன்மையைப் பிரதிபலிக்கிறோம். இதன் காரணமாக, நம்முடைய பெண்கள் ஆண்களின் உடைகளை அணியாமலும், மயிரைக் கத்தரியாமலும், வாசனைப் பொருட்களை (cosmetics) உபயோகிக்காமலும், இன்னும் இவ்வுலகம் அதிகமாக விரும்பும் அநேக செய்கைகளில் ஈடுபடாமலும் இருக்கின்றனர். நம்முடைய ஆண்கள் குடிக்காமல், புகைபிடிக்காமல், மற்றுமுள்ள பாவங்களைச் செய்யாமல் இருக்கின்றனர். நமக்குள் வாசமாயிருக்கும் கிறிஸ்துவின் ஆவியினுடைய வல்லமையைக் கொண்டு பாவத்தின் மேல் நாம் வெற்றிசிறக்கிறோம். இவ்வுலகத்திலுள்ள எல்லா ராஜ் யங்களும் நிச்சயமாய் அழிவடையும்; ஆனால் நம்முடைய ராஜ்யமோ என்றென்றைக்கும் நிலைநிற்கும். உண்மையான ஒரே தேவனையும் அவருடைய உத்தியோகங் களையும் பற்றி இதுவரை நாம் சிந்தித்து வேதத்தின் வாயிலாக அவருடைய மகிமையைக் கண்டுகொண்டிருந்தோம். உலகப் பிரகாரமான ஞானத்தைக் கொண்டு அவரை ஒருக்காலும் அறிய முடியாது. பரிசுத்த ஆவியானவர் அவரை வெளிப்படுத்தும்போது ஆவிக்குரிய பிரகாரமாய் மாத்திரம் நாம் அவரை அறிய முடியும். மாம்சத்தில் இயேசுவென்று அழைக்கப்பட்ட தேவன் அக்கினி ஸ்தம்பத்திற்குத் திரும்பிச் சென்றார். ஆவியாக மறுபடியும் வந்து மக்களிடையே வாசம் செய்வதாக வாக்களித்தார். அவ்வாறே பெந்தெகொஸ்தே நாளில் அக்கினி ஸ்தம்பம் தாழ இறங்கி அக்கினி நாவுகளாகப் பிரிந்து ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. தேவன் கூறியவாறே அவர் தம்மைச் சபைக்குப் பிரித்துக் கொடுத்து அங்குள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தம்முடைய ஒரு பாகத்தை அளித்தார். "நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும் படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியான வரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.. இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைத்திருக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும் நான்' உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக் கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்: நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிற காரணமென்ன என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்" என்றார் (யோவான் 14;16-23). சீஷர்களோடும் சீஷர்களுக்குள்ளும் வாசம் பண்ணும் தேற்றரவாளனை அனுப்ப அவர் பிதாவினிடத்தில் வேண்டிக் கொள்வார் என்றும், அவரே சீஷர்களிடத்தில் மறுபடியும் வரு வாரென்றும் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியெனில் இது கிறிஸ்து வையே குறிக்கிறது. 23-ம் வசனம், "நாங்கள் வந்து வாசம் பண்ணுவோம்” என்று கூறுகிறது. அதாவது பிதாவாகவும் குமாரனா கவும் வெளிப்பட்ட அதே தேவ ஆவியானவர் இப்பொழுது அநேகருக்குள் வாசம் பண்ணுவார். தேவன் ஒருவரே; அவர் ஆவியாயிருக்கிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியாகிய இயேசு பரிசுத்த மனிதனாக இருப்பதால், போப், அத்தியட்சகர் அல்லது போதகர் பரிசுத்த மனிதன் என்று யாரும் கூற இயலாது. குருமார்களே (Hierarchy) ஊழியத்துக்குரியவர்களென்றும் சபையிலுள்ள ஏனை யோர் (laity) ஊழியம் செய்யத் தகுதியற்றவர்கள் என்று கூறுவதற்கு யாதொரு உரிமையுமில்லை.. ஒவ்வொருவனுக்கும் பரிசுத்த ஆவியின் மூலமாக ஒரு ஊழியம் அளிக்கப்படுகிறது. "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்" (யோவான் 14:20) என்னும் கிறிஸ்துவின் வாக்கியம் நிறைவேறப் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் பிரிந்து அங்கு கூடியிருந்தவர்கள் மேல் அமர்ந்தார். இதன் மூலம் எல்லாருக்கும் ஒரு ஊழியம் அளிக்கப்படுகிறது. 'இருக்கிறேன்' என்னும் சர்வவல்லமையுள்ள தேவன் தம் முடைய உண்மையான சபையை ஆவியால் நிரப்புவதற்கென வந்தார். எங்கு வேண்டுமானாலும் அசைவாடுவதற்கும் எவர்மேல் தங்குவதற்கும் அவருக்கு உரிமையுண்டு. நம்மிடையில் பிரத்தி யேகப் 'பரிசுத்த மனிதர்களை' ஏற்படுத்திக் கொள்வது தவறான செய்கையாகும். பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் தேவனுடைய உண்மையான சபை முழுவதும் பரிசுத்தமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மாத்திரம் பரிசுத்தமாயிருக்கிறார். அவரையன்றி மக்கள் பரிசுத்தரல்ல. இயேசுகிறிஸ்துவே தேவன் என்பது நமக்குக் கிடைத் திருக்கும் வெளிப்பாடு. பழைய ஏற்பாட்டின் யேகோவா புதிய ஏற்பாட்டின் இயேசுவாக இருக்கிறார். எவ்வாறு முயன்றாலும், மூன்று கடவுள்களுண்டு என்பதை நிரூபிக்க இயலாது. தேவன் ஒருவரே என்னும் சத்தியத்தைப் பரிசுத்த ஆவியின் வெளிப் படுத்துதலினால் மாத்திரம் அறிய முடியும். அல்லாமலும், பழைய ஏற்பாட்டின் யேகோவாதான் புதிய ஏற்பாட்டின் இயேசு என் பதையும் வெளிப்படுத்துதலின் மூலமே அறிந்துகொள்ள முடியும். சாத்தான் சபைகளில் நுழைந்து, இச்சத்தியத்தை அறியாத வண்ணம் மக்களின் கண்களைக் குருடாக்கிப் போட்டான். அவ்வாறு செய்த மாத்திரத்தில் ரோமன் கத்தோலிக்க சபையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதை நிறுத்தி விட்டது. | பரிசுத்த வேத வாக்கியங்களின் அர்த்தம் மாற்றப்படும் இந்நாட்களில் வாழும் நமக்குத் தேவத்துவத்தைக் குறித்த சத்தியம் பரிசுத்த ஆவியானவரின் மூலமே வெளிப்படும். ஜெயங்கொள்ளும் சபை வெளிப்படுத்துதலின்மேல் கட்டப்பட்டிருப்பதால், எல்லா சத்தியத்தையும் தேவன் நமக்கு வெளிப்படுத்துவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் நமக்கு அவசியமேயில்லை. ஏனெனில் வேத வசனம் இதைப் பற்றித் திட்டவட்டமாகக் கூறுகிறது. தேவனுடைய நேர்முகமான கட்டளையாகிய 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'யின் நாமத்திலுள்ள ஞானஸ்நானத்தை அப்போஸ்தலர்கள் தள்ளி போட்டு, அது உண்மையென்று அறிந்தும் அவர்கள் கீழ்ப்படி யாமலிருந்திருக்க ஏதுவுண்டு என்று நிங்கள் நினைக்கிறீர்களா? அல்லவே அல்ல. 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'யின் நாமம் 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்து' என்று அவர்கள் அறிந்திருந்த படியால், அந்நாமத்தில் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். வேறு எம்முறையிலும் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் சான்று இல்லை. 'அப்போஸ்தலருடைய நடபடிகள்' உண்மையான சபையின் செயல்களைக் கொண்ட ஒரு புத்தகம் என்று பகுத்தறிவு நமக்குப் போதிக்கும். அப்படியிருக்க, அப்போஸ் தலர்கள் அவ்வித ஞானஸ்நானம் கொடுத்திருப்பார்களாயின் நாமும் அதே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். அப்போஸ்தலர் காலத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ் நானம் பெறாத எவனும் அந்நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருந்தது. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்' கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் : பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன் : அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப் பின் வரு கிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ் நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார் கள்” (அப். 19:1-6). எபேசுவில் வாழ்ந்த இந்த நல்ல மனிதர்கள், மேசியாவின் வருகையைக் குறித்து யோவான் பிரசங்கித்ததைக் கேட்டு, பாவத்தினின்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பெற்று, இயேசுவை விசுவாசிப்பதற்கென அவருடைய வருகையை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவர் வந்தபோது, அவரைக் காணத் தவறிவிட்டனர், இப்பொழுது அவர்கள் இயேசுவைப் பின்நோக்கி, பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெறும் சமயம் வந்துவிட்டது. அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுப் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தவுடனே, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். நீங்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவீர்களானால், பரிசுத்த ஆவியால் தேவன் உங்களை நிரப்புவார் என்று வேதவசனம் கூறுகிறது. எபேசியர் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் மூலம், "நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" (அப். 2:38) என்னும் வேதவாக்கியம் நிறைவேறிற்று. பவுலும், பேதுருவும் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் ஒரே ஞானஸ்நானத்தைக் குறித்துப் பேசு கின்றனர். இதைக் கடைசி வரை மாற்றமுடியாது. பெந்தெ கொஸ்தே நாள் தொடங்கி, தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி நபர் ஞானஸ்நானம் பெறும் காலம் வரைக்கும் அது அவ்வாறே இருக்கும். "நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை யல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கடவன்" (கலா 1:8). ஒருத்துவத்தில் (oneness) நம்பிக்கையுள்ள உங்களில் சிலர் தவறான முறையில் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். தண்ணீர் முழுக்கினால் இரட்சிப்புண்டு என்றெண்ணி மறுபிறப்பிற்கேற்ற (regeneration) ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள். மறுபிறப்பு பரிசுத்த ஆவியின் கிரியையேன்றி, அது தண்ணீர் முழுக்கினால் ஏற்படுவ தல்ல. "நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டவன், தண்ணீர் முழுக்கு மனிதனைப் புதுப்பிக்கிறது என்று கூறவில்லை. அது "தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின்" அடையாளமாயிருக்கிறது என்று கூறுகிறான்: "அதற்கு ஒப்பனை யான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது" (1 பேதுரு 3:21). இதை நான் முற்றிலும் நம்புகிறேன். சரித்திரமானது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத் திலுள்ள ஞானஸ்நானம் அல்லாது வேறு முறையான ஞானஸ் நானத்தை ருசுப்படுத்துகிறது என்று உங்களில் யாராவது தவறான எண்ணங்கொண்டிருந்தால், நீங்களே சரித்திரங்களைப் படித்து அக்காலங்களில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தைக் குறித்து அறிய விரும்புகிறேன். கி.பி. 100-ம் ஆண்டில் ரோமாபுரியில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் 'டைம்' (Time) என்னும் பத்திரிகை யில் டிசம்பர் 5, 1955-ம் வெளியீட்டில் குறிக்கப்பட்டிருந்தது. அதில் மார்கஸ் வாஸ்கா (Marcus Vasca) என்பவர் பூப்ளியஸ் டெஸியஸ் (Publius Decius) என்பவருக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. பூப்ளியஸ், "என்னுடைய இரட்சிப்பு பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையிலறையுண்ட இயேசு கிறிஸ்து வினிடத்திலிருந்து வருகிறது என்று நான் பூரணமாய் விசு வாசிக்கிறேன், அவரோடு நித்திய ஜீவன் பெறுவதற்கென, நான் அவரோடுகூட மரித்தேன்" என்று கூற, மார்கஸ், "நான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கி றேன்" என்று கூறி பூப்ளியஸைத் தண்ணீரில் முழுக்கினதாகச் சரித்திரம் கூறுகிறது. சத்தியத்தைச் சபையானது நிசயாவில் இழக்கும் வரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது இழந்த சத்தியத்தைச் சபையானது இந்நூற்றாண்டு தொடக்கத்தில், பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலினால் மீண்டும் பெற்றது. பரிசுத்த ஆவி வெளிப் படுத்தச் சித்தங்கொண்ட எதையும் சாத்தான் ஒருக்காலும் மறைக்க முடியாது. மூன்று கடவுள்கள் இருப்பார்களாயின், பிதாவுக்கென்றும், குமாரனுக்கென்றும், பரிசுத்த ஆவிக்கென்றும் ஞானஸ்நானங் கொடுக்கலாம். ஆனால், ஒரே தேவன் உண்டு. என்றும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதே அவருடைய நாமமென்றும் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டபடியால், ஒரே தேவனுடைய நாமத்திலே நாம் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் இவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்தான். "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாக அறியக்கட வர்கள்" (அப்.2:36) என்ற வெளிப்படுத்தலுக்கு அவன் கீழ்ப்படிய வேண்டியதாயிருந்தது. அப்படியெனில் தேவன் "கர்த்தராகிய இயேசு கிறிஸ்து" என்னும் நாமம் கொண்டவர். இயேசுவே ஆண்டவரும் கிறிஸ்துவுமானால், அவரே மாம்சத் தில் வெளிப்பட்ட ஒரே தேவனான "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி". இது திரித்துவக் கொள்கையின்படி ஒரே தேவனில் மூன்று ஆட்களுண்டு என்ற அர்த்தங்கொண்டதல்ல. ஒரே தேவன், ஒரே ஆள், மூன்று முக்கியமான உத்தியோகங்களை பெற்றிருக்கிறார் என்பதுதான் அதன் அர்த்தம். இந்த இயேசுவே ஆண்டவரும் (பிதாவும்) கிறிஸ்துவுமாயிருக்கிறார் (பரிசுத்த ஆவி). ஆம், இயேசுவே ஒரே தேவனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. பிலிப்பு ஒருநாள் இயேசுவினிடத்தில் வந்து, "பிதாவை 'எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்" என்றான். அதற்கு இயேசு "பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களு டனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார் (யோவான் 14:8-9), இதை ஒருமுறை நான் செய்தியில் கூறின போது, ஒரு ஸ்திரீ எழுந்து சகோதரன் பிரான்ஹாமே, நீங்களும் மனைவியும் ஒன்றாயிருப்பது போலப் பிதாவும் இயேசுவும் ஒன்றாயிருக்கிறார்கள்" என்றாள். அதற்கு நான் "அவ்வாறில்லை. என்னைக் காணும்போது என்னுடைய மனைவியை நீங்கள் காணமுடியாது. ஆனால் ஒருத்துவம் (Oneness) வித்தி யாசப்பட்டது. ஏனெனில் இயேசுவைக் காணும்போதே பிதாவைக் காண்பதாக அவர் கூறுகிறார்" என்று பதிலுரைத்தேன். சிறிது நாட்களுக்குமுன்பு, ஒரு யூத ரபியோடு நான் சம்பா ஷித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் என்னை நோக்கி "புற ஜாதிகளாகிய நீங்கள் கர்த்தரை மூன்றாகத் துண்டித்து, இவ்வித மான கர்த்தரை ஏற்றுக்கொள் என்று ஒரு யூதனோடு கூறினால் அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான். எங்களுக்குக் கர்த்தத்துவத்தைப் பற்றி உங்களைக் காட்டிலும் அதிகம் தெரியும்" என்றார். அதற்கு நான், புறஜாதியார் அவ்வாறு செய்வதில்லையென்று கூறித் "தீர்க்க தரிசிகளை விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர் "ஆம்" என்று உரைக்க, நான் மறுபடியும் "ஏசாயா 9:6ஐ விசுவாசிக்கிறீர்களா" என்று வினவினேன். அதற்கு அவர், அது மேசியாவைக் குறிக்கிறது என்று விசுவாசிப்பதாகவும், வரப்போகும் மேசியா தேவனாகத்தான் இருக்க முடியும் என்பதாகவும் கூறினார். ஆம், ஒரு யூதனிடம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூவர் இருக்கின்றனர் என்று கூறுவோமானால், அத்தகைய கொள்கை நிசாயாவின் ஆலோசனை மகாநாட்டில் தோன்றினது என்பதை அவன் அறிந்திருக்கிறபடியால் நம்மை அஞ்ஞானியென்று இகழுவான். தேவன் மாறாதவராயிருக்கிறார் என்று நாம் எண்ணுகிற படியே, ஒரு யூதனும் விசுவாசிக்கிறான். ஆனால் சபையோ மாறக் கூடாத தேவனை ஒன்றிலிருந்து மூன்றாக மாற்றிப் போட்டது. தேவத்துவத்தைக் குறித்த வெளிச்சம் இந்த சாயங்கால நேரத்தில் உண்டாகிறது. யூதர்கள் பாலஸ்தீனாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் காலத்தில் இந்த சத்தியம் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே. இயேசுவே ஆண்டவரும் கிறிஸ்துவுமாயிருக்கிறார். இயேசுவும் தம்மை, "ஆமென், இருக்கிறவரும், இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்” என்று யோவா னுக்கு வெளிப்படுத்தினார். இதைக் குறித்த வெளிப்படுத்துதல் உனக்கு இல்லையெனில், அதற்காகக் கர்த்தரைத் தேடுவாயாக. வெளிப்படுத்துதல் கர்த்தரிடத்திலிருந்து வரவேண்டுமேயன்றி, மனித ஞானத்தின் மூலம் கிடைக்காது. அநேக வேத வாக்கியங்களை மனப்பாடம் செய்தாலும் அது கிட்டாது. "பரிசுத்த ஆவியினாலே யன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவரும் சொல்லக்கூடாது." (1 கொரி. 12:3) என்று வேதம் எடுத்துரைக்கிறது- நீங்கள் முதலில் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும், அதன் பின்னர்தான் இயேசுவே கிறிஸ்து என்னும் வெளிப்பாடு உங்களுக்குக் கிடைக்கும். "தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரிய வைகளை அறியமாட்டான்" (1 கொரி.2:11). தேவனுடைய ஆவி இவைகளை யாருக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ, அவனை யன்றி ஒருவனும் இவைகளை அறியமாட்டான். இவ்வுலகத்தில் எல்லாவற்றைக் காட்டிலும் தேவனுடைய வெளிப்பாட்டிற்காக அவரிடத்தில் மன்றாடுவது மிகவும் அவசியமாயிருக்கிறது. நாம் வேதத்தையும் அதிலுள்ள சத்தியங்களையும் ஏற்றுக் கொண்டாலும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படுத்துதல் இல்லாதபடியால் அநேகருக்கு இச்சத்தியங்கள் உண்மையாகவே தோன்றவில்லை. வசனம் ஆவியினால் உயிர்ப்பிக்கப்படாததே இதன் காரணம். உதாரணமாக, "நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியா கிறோம்” என்று வேதம் கூறுகிறது (2 கொரி.5:21). மேலும், அவ்வசனம் இயேசு நமக்காகப் பாவமானார் என்றும் குறிப்பிடு கிறது. பாவமுள்ளவரானார் என்று அது கூறாமல், நாம் அவரோடு ஐக்கியங் கொள்வதன் மூலம் தேவனுடைய நீதியாக ஆவதற்கு அவர் நமக்காகப் பாவமானார் என கூறுகிறது. அவர் நமக்குப் பதிலாகப் பாவமானார் என்னும் சத்தியத்தை நாம் ஏற்றுக் கொள்வோமென்றால், அவரோடு ஐக்கியப்பட்டதன் மூலம் நாம் தேவனுடைய நீதியாகவே ஆகிவிட்டோம் என்றும் சத்தியத்தை யும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதம் இச்சத்தியத்தை உரைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை . ஆனால் இச்சத்தியத்தைக் குறித்த வெளிப்பாடு அநேகருக் கில்லாத படியினால் அது உண்மையாகத் (தத்ரூபமாகத் தோன்றுவதில்லை. பெரும்பாலாருக்கு இது வேதத்திலுள்ள ஒரு நல்ல வாக்கியமாக மாத்திரம் திகழ்கிறது. ஆனால் வெளிப்படுத்துதல் அதை உயிர்ப் பிக்கும் போது அது நமக்கு உண்மையாகவே இருக்கிறது. புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழியே என்று வேத மாணாக்கர் அறிவர். தேவன் உலகத்திற்கு கிரேக்கரின் மூலம் பொதுவான மொழியையும் (Universal Language), யூதர் களின் மூலம் உண்மையான மார்க்கத்தையும், இயேசுவின் மூலம் தேவனைப் பற்றிய அறிவையும், ரோமர்களின் மூலம் ஸ்திரப்பட்ட சாம்ராஜ்யத்தையும், பிரமாணத்தையும், நெடுஞ்சாலைகளையும் அளித் தார் என்று பிரபல வேதமாணாக்கர் கூறியிருக்கின்றனர். உண்மை யான மார்க்கத்தைக் குறித்து மற்றவர்களுக்குப் போதிக்க ஒரு நல்ல மொழியையும், அந்த மார்க்கத்தைப் பரப்புவதற்குச் சாதக மாக ஒரு அரசாங்கத்தையும் நெடுஞ்சாலைகளையும் கர்த்தர் கொடுத் தார். வேதத்தின் காலத்திலிருந்த கிரேக்க மொழி பழுதற்று இருந்தபடியால், கிரேக்க இலக்கணம் படித்து பாண்டியத்யம் பெற்ற ஒரு நிபுணன் புதிய ஏற்பாடு போதிப்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தற்போதைய கிரேக்க நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியெனில் ஒரு ஸ்தாபனத்திலுள்ள கிரேக்க நிபுணன் மற்றொரு ஸ்தாபனத்திலுள்ள கிரேக்க நிபுணனோடு புதிய ஏற்பாட்டிலுள்ள ஒரு வாக்கின் அர்த்தத்தின் பேரில் வாக்குவாதம் நடத்த வேண்டுவதென்ன? இதன் காரணமாக கிரேக்க இலக்கண மும் மாறுபட்ட அர்த்தம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று எண்ணவேண்டியதாய் இருக்கிறது. பெர்கமு சபையின் காலத்தில் நிசாயா ஆலோசனை சங்கம் நடந்தேறுவதற்கு முன்பு ஏரியஸ் (Arius), அத்தனேஷியஸ் (Athanasius) என்னும் இரு கிரேக்க நிபுணர்கள் ஒரு கிரேக்க பதத்தின் அர்த்தத்தைக் குறித்துத் தர்க்கித்ததன் காரணமாக உலகத்திலுள்ள கிரேக்க நிபுணரெல் லாம் இரண்டு பிரிவாகப் பிரிந்து. முறையே இவ்விரு நிபுணர்களை ஆதரிக்கத் தொடங்கினர். கிரேக்க மொழி தேவனால் அங்கீகாரம் பெற்றுப் பழுதற்றிருப்பின், பின்னை ஏன் அந்த மொழியைக் குறித்து இவ்வளவு தர்க்க ம் உண்டாக வேண்டும்? "Christ's Paralysed Church X-rayed' என்ற புத்தகத்தில் டாக்டர் மார்க்க்ராஸன் (Dr. McCrossam) என்பவர், ஒருவன் மறுபடியும் பிறந்த பிறகு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவதாக வேதம் போதிக்கிறது என்றும், ஆங்கிலத்தில் 'Prophecy' என்று மொழி பெயர்க்கப்பட்ட கிரேக்கப் பதம் உண்மையாகவே 'போதகம்' என்னும் அர்த்தங் கொண்டிருக்கிறபடியால், ஸ்திரீகள் தடையின்றி பிரசங்கம் செய்ய லாம் என்றும், இவையிரண்டும் பிழையற்ற கிரேக்க இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டு நிரூபிக்கப்படுகிறது என்றும் வாதிக்கிறார். என்றாலும் மற்ற கிரேக்க நிபுணர்கள் இவர் கூறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. புதிய ஏற்பாட்டின் மூலமொழி அராமிய மொழி என்றும், இயேசுவின் காலத்தில் இது வழங்கு மொழியாயிருந்தது என்றும் சில வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டாக்டர் லாம்ஸா (Dr.Lamsa) என்பவர் கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப் படவில்லை என்று சாதிக்க, இதைப் பிரசித்திபெற்ற சரித்திரக் காராகிய டாய்ன்பீ (Toynbee) என்பவர் ஆதரிக்கிறார். அதே சமயத் தில் டாக்டர் ஷோன் ஃபீல்டு (Schonfield) என்னும் பிரசித்தி வாய்ந்த வேத ஆராய்ச்சியாளர் புதிய ஏற்பாடு அக்காலத்து கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்பதற்கு சான்றுகள் காண்பிக்கிறார். ஜேம்ஸ் அரசனின் வேதத்தையும் டாக்டர் லாம்ஸா எழுதிய வேதத்தையும் ஒப்பிட்டு பார்ப்போமேயானால், போதகத்திலோ உள்ளடக்கத்திலோ வேற்றுமையை நாம் காணுவதில்லை. ஏற்கெனவே கிடைக்கப் பெற்ற பிரதிகள் உண்மையானவைகளே என்று நிரூபிப் பதற்கென அதேபோன்ற பிரதிகளை தேவன் நமக்கு அளிக்கிறார் என்றுதான் நாம் முடிவு செய்ய வேண்டும். பிரதிகளின் மொழி பெயர்ப்பாளர் ஒருவரோடு ஒருவர் சண்டை பிட்டுக் கொண்டாலும் இவைகளிலடங்கியிருக்கும் சத்தியங்கள் மாறுதல்களைக் கொண்ட தாக நமக்குக் காணப்படவில்லை. வேதத்தில் எழுதப்பட்ட சத்தியங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ள, அது எழுதப்பட்ட மொழியில் பாண்டித்யம் பெற்றவர் கள் நமக்கு அவசியமில்லை. அதற்குப் பதிலாக வெளிப்படுத்தலே நமக்கு அவசியம். உங்களுடைய சிந்தை பாரம்பரியத்தால் மறைக் கப்பட்டு நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ளாமலிருந்தால், இன்னும் ஒரு உதாரணத்தை வேதத்திலிருந்து காண்பிக்க விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயரும் வேதம் எழுதப்பட்ட மொழியில் பாண்டித்யம் பெற்று, இலக்கணத்தின் விகுதிகளையும், பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட வார்த்தைகளின் அர்த்தங்களையும் நன்கு அறிந்திருந்தனர். இருப் பினும், தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் குமாரனில் நிறை வேறியது என்னும் தேவனுடைய வெளிப்படுத்தலை அவர்கள் அறிய வில்லை. ஆதியாகமம் தொடங்கி மல்கியா முடிய காணப்படும் பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில் இயேசுகிறிஸ்துவைக் குறித்த வாக்குத்தத்தங்கள் எவ்வளவோ அடங்கியிருக்கின்றன. சில முழு அதிகாரங்கள் இயேசுவையும் அவருடைய ஊழியத்தையும் மாத் திரம் விவரிக்கின்றன. ஆயினும், ஆவியினால் உணர்த்தப்பட்ட சிலரைத் தவிர, மற்றெல்லாரும் இயேசுகிறிஸ்து யார் என்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை. பழைய கைப்பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்வதன் மூலம் வேதத்தின் உண்மையான அர்த்தம் புலப்படாது. தேவ னிடத்திலிருந்து வரும் வெளிப்படுத்தலே அதன் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும். "அவைகளை நாங்கள் மனுஷ ஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவை களோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்" என்று பவுல் கூறு கிறார் (1 கொரி.2:13). தேவன் தம்முடைய வார்த்தைகளுக்கு அர்த் தம் கொடுத்து, அவர் வாக்குத்தத்தம் செய்ததை நடை முறையில் நிறைவேற்றிக் காண்பிப்பதே (Vindicate) உண்மையான வெளிப் பாடாகும். இப்பொழுது இருக்கும் வேதவசனத்தின் பிழையின்மையைக் (accuracy) குறித்து நான் சந்தேகப்படுகிறேன் என்று யாரும் தவறாக எண்ணவேண்டாம். வேதாகமம் பிழையில்லாமல் இருக்கிறது. இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திலிருந்தபோது பழைய ஏற் பாடு முற்றிலும் உண்மையென்று நிரூபித்தார். பழைய ஏற்பாட் டின் புத்தகங்கள் தொகுக்கப்பட்டபடியால் இவைகளும் முற்றிலும் உண்மையாகவே இருக்கவேண்டும். இன்றைக்கு தேவனின் பிழையற்ற வேதாகமம் நமக்குண்டு. அதிலிருந்து எதையும் கூட்டவோ குறைக்கவோ யாரும் துணிச்சல் கொள்ளக்கூடாது. ஆனால் வேத வாக்கியங்களை அளித்த பரிசுத்த ஆவியே அவைகளை நமக்குப் போதிக்க வேண்டுவது அவசியம். நமக்குப் புதிய வேதாகமமோ, புதிய மொழிபெயர்ப்போ அவசியமில்லை. பரிசுத்த ஆவியே தம்முடைய வார்த்தைகளின் அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத் திக் கொடுக்க வேண்டும். தேவன் தாமே தம்முடைய ஆவியின் மூலமாக ஜீவனைக் கொடுக்கும் வெளிப்பாடுகளைத் தொடர்ச்சியாக நமக்கு அருளுவாராக. சபை மாத்திரம் இப்போதைக்குரிய வெளிப்படுத்தலைப் பெற்று ஜீவனுள்ள வார்த்தையைக் கடைப் பிடித்தால், நாம் அநேகப் பெரிய கிரியைகளைச் செய்து பரலோகத்திலிருக்கிற பிதாவை மகிமைப்படுத்த முடியும்.